எகிப்தில் 3 போலீசார் சுட்டுக்கொலை

260 0

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்ப பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எகிப்து நாட்டின் சினாய் தீபகற்ப பகுதியில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது இந்த பயங்கரவாத அமைப்புகள் நாட்டின் பிற பகுதிகளிலும் காலூன்றி தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், தலைநகர் கெய்ரோவின் கிழக்கு பகுதியில் இருக்கும் நாசர் நகர் விரைவு சாலையில் போலீசார் முகாமிட்டிருந்த இடத்தில் பயங்கரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் இரவு காரில் வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த போலீசாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 3 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 2 பேர் அலெக்ஸ்சாண்டிரியா மற்றும் டான்டா நகரங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பயங்கர தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் 45 பேரை கொன்று குவித்தது நினைவு கூரத்தகுந்தது.