அநுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் காணப்படும் மஹகனந்தராவ நீர்த்தேக்கத்தை பயன்படுத்தி ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அநுராதபுரம் வடக்கு பாரிய நீர் விநியோகத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
இதன் முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்த பின்னர், அநுராதபுரம் மாவட்டத்தின் ரம்பாவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களின் நன்மை கருதி கடந்த ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாரிய நீர் விநியோகத் திட்டத்தின் முதலாம் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் நாட்டின் தூதுவர் அக்கிஓ இசோமடா Akio Isomata உட்பட ஜப்பானின் விசேட தூதுக் குழுவினருக்கும் அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் விமல் சூரிய உட்பட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே இரு தரப்பு விசேட கலந்துரையாடல் அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்றது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார் நவரத்னவும் கலந்துகொண்டார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஜப்பான் நாட்டின் விசேட தூதுக் குழுவினர் அநுராதபுரம் வடக்கு நீர் விநியோகத் திட்டத்தினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், நீர் விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

