நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்காவிடின் பல இலட்ச விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம்

79 0

கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கம் விவசாயத்துறையை நெருக்கடிக்குள்ளாக்கியதால் தான் போராட்டம் தோற்றம் பெற்றது. ஆகவே தவறிழைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம். நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவாக நிர்ணயிக்காவிடின் அரசாங்கத்துக்கு எதிராக இலட்ச கணக்கான விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் என தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து பாகொட தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும், நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அரிசி மாபியாக்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை கடந்த ஆண்டு தோளில் சுமந்துக் கொண்டு திரிந்த விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று விவசாயிகளுக்கு எதிராக செயற்படுகிறார்.

விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுவதையிட்டு வெட்கமடைகிறோம். விவசாயிகளுக்கு வழங்குவதாக குறிப்பிட்ட உர நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் அழிவு விவசாயத்துறையில் இருந்தே ஆரம்பமானது. சேதன பசளைத் திட்டத்தை அமுல்படுத்தி முழு விவசாயத்துறையையும் நெருக்கடிக்குள் தள்ளினார். விவசாயத்துறையில் தவறான தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று கோட்டபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினோம். இருப்பினும் விவசாயிகளின் அறிவுறுத்தலை கோட்டபய ராஜபக்ஷ கவனத்திற் கொள்ளவில்லை. இறுதியில் நாட்டை விட்டு தப்பியோட நேரிட்டது.

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் வெகுவிரைவில் தீர்மானிக்க வேண்டும்.இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக பல இலட்ச விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம். ஆகவே அரசாங்கம் தவறிழைக்காமல் நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் அறிவிக்க வேண்டும் என்றார்.