சந்தைக்குத் தேவையான ஜீவனிகளை தொடர்ந்து விநியோகிப்பதற்கு, புதிய இயந்திரங்களை நிறுவி ஜீவனி உற்பத்தியை விரிவுபடுத்துமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான இரத்மலானையில் உள்ள ஜீவனி உற்பத்தி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அமைச்சர் அண்மையில் திடீர் விஜய் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன் போது நிர்வாக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தொரிவிக்கையில்,
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, வாய்வழி நீரேற்ற சிகிச்சையாகப் பயன்படுத்தப்படும் வாய்வழி நீரேற்ற உப்புகள் ( ஜீவனி) தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான இயந்திரங்களை உடனடியாக நிறுவுவது அவசியம்.
சந்தைக்குத் தேவையான ஜீவனிகளை தொடர்ந்து விநியோகிப்பதற்கு, புதிய இயந்திரங்களை நிறுவி ஜீவனி உற்பத்தியை விரிவுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கிறேன். இந்நாட்டில் ஜீவனியை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் அரச மருந்தகக் கூட்டுத்தாபனமாகும்.
மேற்படி கூட்டுத்தாபனத்தின் கீழ் மாதந்தோறும் 1000 மிலி (33,500 X 25) கொண்ட 25 தொகுதிகளையும், 200 மிலி பைகற்றுகள்(165,500 X 8) கொண்ட 8 தொகுதிகளையும் உற்பத்தி செய்கிறது. இரு வெவ்வேறு அளவான ஜீவனியை தயாரிக்க தற்போது ஒரே இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயந்திரமும் 12 ஆண்டுகள் பழமையானது என்பதும் தெரியவந்தது.
தற்போதைய சந்தை தேவையை பூர்த்தி செய்யும் உற்பத்தி திறனை ஒரே இயந்திரத்தால் உற்பத்தி செய்ய முடியாது. ஆகையால் தற்போது சந்தையில் ஜீவனிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. மேலும் தற்போதுள்ள ஊழியர் பற்றாக்குறை மற்றும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

