காஷ்மீரில் இந்தியா அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது – பாகிஸ்தான் ராணுவத் தளபதி

212 0

காஷ்மீரில் இந்தியா அரச பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஜாவேத் பஜ்வா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பஜ்வா நேற்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு வருகை தந்து, ஹாஜி பீர் செக்டாரில் உள்ள பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது அங்கு முகாமிட்டுள்ள அந்நாட்டு ராணுவ வீரர்களிடம் அவர் உரையாற்றினார்.

இந்திய ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஜாவேத் பஜ்வாவிடம் கூறினர். மேலும், ஆக்கிரமிக்கும் முயற்சி ஏதாவது நடைபெற்றால் அதற்கு தங்கள் ராணுவத்தின் தயார் நிலை குறித்தும் பாஜ்வாவிடம் அவர்கள் எடுத்துக் கூறினர்.

அப்போது சக ராணுவ அதிகாரிகளிடம் ஜாவேத் பஜ்வா ,”சுய நிர்ணய உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் ஆகியவற்றுக்கான காஷ்மீர் மக்களின் அரசியல் போராட்டத்துக்கு நாம் எப்போதும் ஆதரவு தருவோம். காஷ்மீரில் அரசு ஆதரவிலான பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவிக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு எதிராக மட்டுமன்றி, பாகிஸ்தான் தரப்பு எல்லைப்பகுதியில் உள்ள மக்களுக்கு எதிராகவும் இந்தியா அட்டூழியம் புரிகிறது” எனக் கூறினார்.

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் கூறி வரும் குற்றச்சாட்டுகளை இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.