இலங்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்குத் தாம் எப்போதும் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் தெரிவித்துள்ளார்.
தமிழ்பேசும் புத்திஜீவிகள் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் மற்றும் விரிவுரையாளர் சுமதி சிவமோகன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது குறிப்பாக தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்தும், அவர்கள் முகங்கொடுத்துவரும் முக்கிய அரசியல் பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக இலங்கையின் சமகால அரசியல் நிலைவரம், நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதனை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் அதில் உள்வாங்கப்படவேண்டிய விடயங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயன்முறை என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது பரந்துபட்ட ரீதியில் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக், இலங்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்குத் தாம் எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

