பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்துகொள்வதற்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை தீர்மானிக்காமல் இருக்கிறது என அனுராதபுரம் மாவட்ட நீர்ப்பாசன விவசாயிகளின் சங்கத்தின் தலைவர் புஞ்சிரால ரத்நாயக்க தெரிவித்தார்.
நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றபோதும் அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை தெரிவிக்காமல் இருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நெல் அறுவடை இடம்பெற்று வருகிறது. ஆனால் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கு தேவையன எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.
குறி்ப்பாக நெல்லுக்கான உத்தரவாத விலையை இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது.
அரசாங்கத்தின் இந்த இந்த நடவடிக்கையை பார்க்கும்போது எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. அதாவது அரிசி ஆலை உரிமையாளர்களுடன் டீல் வைத்துக்கொண்டுதான் இவ்வாறு செயற்டுகிறதா என்று தோன்றுகிறது.
நெல்லுக்கு உத்தரவாத விலையை அறிவிக்காமல் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இடமளித்திருக்கிறது. இதில் பாரிய சதித்திட்டம் இருக்கிறது.
அரசாங்கம் விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலையை அறிவிக்காவிட்டால், அரசாங்கம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
கோட்டாபய ராஜபக்ஷ அன்று விவசாயிகளுக்கு எதிரான எடுத்த தீர்மானங்கள் காரணமாக விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து வீதிக்கி இறங்கினார்கள்.
அந்த நிலை மீண்டும் ஏற்படும் என்பதை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். அதனால் அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவாக அறிவிக்க வேண்டும் என்றார்.

