தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்கள்

447 0

1451119076_3955260_hirunews_Sampanthan2-1தமிழ் மக்களை ‘கட்டாய சுய உறக்கத்துக்குள்’ வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல் உரிமைப் போராட்டங்களில் மூர்க்கமாக ஈடுபட்ட தரப்பான தமிழ் மக்களை உறக்க நிலையில் வைத்திருப்பதன் மூலம், போராட்ட குணத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும் நீர்த்துப் போகச் செய்யலாம் என்பது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் எதிர்பார்ப்பு. அதற்காகவே, தமிழ் மக்களை நோக்கி அபசுரங்களுடனான தாலாட்டுக்கள் தொடர்ச்சியாகப் பாடப்படுகின்றன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மறைந்த முருகேசு சிவசிதம்பரத்தின் 93வது பிறந்த தின நிகழ்வு கரவெட்டியில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. அங்கு நினைவுப் பேருரையை ஆற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்வைத்த கருத்துக்களும் யோசனைகளும் கூட கட்டாய உறக்கமொன்றுக்கான தாலாட்டின் சாயலை பெருமளவு ஒத்திருந்தது. ஹக்கீமின் மும்மொழிப் புலமையும் சொற்களை இலாவகமாகக் கையாளும் முறையும் அவரைக் கவர்ச்சிகரமான பேச்சாளராக வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. கரவெட்டியில் அவர் ஆற்றிய உரையும் அவ்வளவு கவர்ச்சிகரமானதாகவும் புத்திசாலித்தனமானதாகவும் இருந்தது. ஏனெனில், தான் சொல்ல வந்த மூர்க்கமான – சர்ச்சையான கருத்துக்களை மற்றவர்களின் மேற்கொள்களினூடாக முன்வைத்து வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல ஏற்றிச் சென்றார்.

ஹக்கீம் தன்னுடைய உரையில் இரண்டு விடயங்களைப் பிரதானப்படுத்தினார். முதலாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வினை 13வது திருத்தச் சட்டமூலத்தை அடியொற்றி முடக்குதல். இரண்டாவது, இறுதி மோதல்களில் தமிழ் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் நீதிக் கோரிக்கைகளை கைவிடக் கோருதல் அல்லது பொதுமன்னிப்பின் கீழ் கடக்க வைத்தல் என்பனவாகும்.

தனித் ‘தமிழீழம்’ என்கிற நிலையிலிருந்து இறங்கி வந்து, சமஷ்டிக் கட்டமைப்புக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ்வது பற்றிய பெருமளவான விட்டுக் கொடுப்புக்கு தமிழ் மக்கள் வந்திருக்கின்றார்கள். அதற்கான இசைவையும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால், ஒற்றையாட்சியின் கீழ் குறிப்பாக, அதிகாரங்களற்ற மாகாண சபைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடக்கி விட வேண்டும் என்பதில் தென்னிலங்கையும் வெளிச்சக்திகளும் தெளிவான திட்டங்களோடு செயற்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உறுதியான முடிவுகளோடும் தீர்க்கமான திட்டங்களோடும் களமாடுதலுக்கு தமிழ்த் தரப்புக்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால், தமிழ் மக்களின் ஏக ஆணையைப் பெற்ற தரப்பாக தன்னை முன்னிறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒற்றையாட்சி ஒன்றுக்குள் ஒத்திசைந்து, 13வது திருத்தச் சட்டத்துக்குள் அமுங்கிவிடுவதற்கு தயாராகி விட்டார் என்று தோன்றுகின்றது. அதற்கான வெளிப்படுத்தல்களை அவர் மெல்ல மெல்ல ஆரம்பித்து விட்டார். அரசியல் என்பது அதியுச்ச அடைவுகளை சாத்தியமான வழிகளினூடு அடைவது. ஆனால், அதியுச்ச அடைவுகளின் எல்லைகளைக் குறுக்கிக் கொண்டு விடயங்களை இன்னும் இன்னும் மலினப்படுத்தும் போக்கில் செல்வது அரசியல் தலைமையொன்றின் ஆளுமைக் குறைபாடாக அல்லது தோல்வியாகக் கொள்ள முடியும். அப்படியான நிலையொன்றினை நோக்கி சாணக்கியம்மிக்க தலைவர் என்று பலராலும் அழைக்கப்படுகின்ற இரா.சம்பந்தன் சென்று கொண்டிருக்கின்றார்.

தென்னிலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தாது விடயங்களை நெகிழ்வுப் போக்கோடு கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும், இரா.சம்பந்தன் அண்மைய நாட்களில் ‘ஒற்றையாட்சி சமஷ்டி’ என்கிற விடயமொன்றை முன்வைக்க ஆரம்பித்து இருக்கின்றார். இது, புதிதான புதிரான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது. அரசியல் கருத்துருவாக்கம் என்பது தமிழ்த் தேசிய அரசியலில் வீழ்ச்சி கண்டுள்ள இன்றைய நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமான எழும் ஒரு சில கருத்துக்களையும் கருத்திலெடுக்காமல் கடக்க வேண்டும் என்பதிலும் இரா.சம்பந்தன் குறியாக இருக்கின்றார். அது, அவரின் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் போக்கில் கட்டமைக்கப்படுகின்றது. இப்படியானதொரு நிலையில், தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் எவ்வாறான வெளிப்பாடுகளின் ஊடாக விடயத்தை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களின் போக்கில் கையாளப்போகின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.

கரவெட்டியில் ஹக்கீம் ஆற்றிய உரை கிட்டத்தட்ட இரா.சம்பந்தனின் ஆசியோடு நிகழ்த்தப்பட்டதாக கொள்ள முடியும். தான் சொல்ல நினைப்பவற்றை இன்னொரு சமூகத்தின் பிரதான தலைவரைக் கொண்டு, குறிப்பாக நல்லிணக்கம், விட்டுக்கொடுப்பு, பொதுமன்னிப்பு என்கிற அடிப்படைகளினூடு முன்வைக்க வைத்திருக்கின்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணித் தலைவர்களான மறைந்த அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், முருகேசு சிவசிதம்பரம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் பெரும் முனைப்பினாலேயே 13வது திருத்தச் சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அதுவே மாகாண சபைகளின் உருவாக்கம் என்றும் ஹக்கீம் தன்னுடைய உரையில் கூறினார். அதன் தொடர்சியாக, திருத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் (தமிழ், முஸ்லிம் மக்களின்) கூட்டிணைவோடு தீர்வொன்று அடையப்பட வேண்டும் என்ற தொனியில் தன்னுடைய யோசனைகளை அவர் முன்வைத்தார். வடக்கு- கிழக்கில் இரண்டாவது பெரும்பான்மையுள்ள முஸ்லிம் சமூகத்தின் பிரதான தலைவரொருவர் 13வது திருத்தச் சட்டத்துக்குள் தீர்வினைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் வலியுறுத்துவதும், அதனைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக இறுதி செய்யக் கோருவதும் ஏமாற்றமானது. அதனை, தமிழ்த் தேசியத் தலைமைகள் என்ன கண்ணோட்டத்தோடு அனுமதிக்கின்றன என்பதுவும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டியது.

தமிழ்த் தேசிய அரசியலில் முனைப்புப் பெற்ற வார்த்தைகளான சமஷ்டி, போர்க்குற்றம் உள்ளிட்டவற்றை அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் என்பதிலும் ஹக்கீம் குறியாக இருந்தார். அதற்காக அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் சிவா பசுபதியின் வார்த்தைகளை கடனாக வாங்கினார். தென்னிலங்கையை எரிச்சலூட்டும் விடயங்களாக சமஷ்டியையும் போர்க்குற்றத்தையும் அவர் முன்னிறுத்தினார். ஒரு சமூகத்தின் விடுதலையையும் நீதியையும் வலியுறுத்தும் விடயங்களின் அடிப்படைகளைப் புறந்தள்ளக் கோருவது எவ்வகையில் சரியாக இருக்கும். ஆனால், அதனை ஹக்கீம் செய்தார். அவர், மேம்போக்கில் இலகுவான விடயங்களை முதலில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், சர்ச்சைக்குரிய – முக்கியமான விடயங்களைக் காலம் கடத்தி கையாள வேண்டும் என்றார். இது, மிகவும் அச்சுறுத்தலான விடயம்.

இன்னொரு பக்கம், தம்மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கான நீதி பற்றிய கோரிக்கைகளை தமிழ் மக்கள் கைவிட வேண்டும் என்றார். அதாவது, மன்னிப்பினை வழங்கும் மனநிலைக்கு வர வேண்டும் என்றார். நல்லிணக்கம் என்பது விட்டுக்கொடுப்பு மற்றும் மன்னிப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இறுதி மோதல்களின் போது தமிழ் மக்கள் மீது பாரிய கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதைக் பார்த்துக் கொண்டிருந்த ஹக்கீம், பின்னரான காலத்தில் போர்க்குற்றங்களை நிகழ்த்திய அரசாங்கத்திலேயே இணைந்து அந்த அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் நிகழ்வுகளை ஜெனீவாவில் அரங்கேற்றினார். அது, தென்னிலங்கையின் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் அடிப்படைகளை நிறைவேற்றுவதாக இருந்தது. அடிப்படையில், தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற சிறுபான்மையினங்களின் முக்கிய தலைவர் ஒருவர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ் மக்களிடம் கனத்த துக்கத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அப்படிப்பட்ட நிலையில், போர்க்குற்றங்களை நிகழ்த்திய அரசாங்கத்தினை நியாயப்படுத்திய ஒருவர் வந்து ‘பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும். அதற்குத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும்’ என்று வலியுறுத்துவது அபத்தமானது. அதனை ஒருநிலை தாண்டிச் சொல்வதென்றால் அயோக்கியத்தனமானது.

இங்கு, தென்னிலங்கைக்கும், முஸ்லிம் சகோதர மக்களுக்கும் சொல்லிக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் நல்லிணக்க முனைப்புக்களுக்கு தயாராக இருக்கின்றார்கள். மன்னிப்பினூடு நம்பிக்கையின் அடிப்படைகளை கட்டமைப்பதிலும் ஆர்வமாக இருக்கின்றார்கள். ஆனால், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றங்களை மன்னித்தல் என்பது அநீதிக்கு ஒத்துழைத்தல் என்று பொருள்படும். அதனை, என்றைக்கும் செய்ய முடியாது. அது, இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் மீதான அடக்குமுறைக்கு வலுச் சேர்ப்பதாகும். சுமார் 70 ஆண்டுகளை அண்மித்துவிட்ட தமிழ் மக்களின் போராட்டம் என்பது அடக்குமுறைகளுக்கு எதிரானது. அந்தப் போராட்டத்தின் போக்கில் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அது மறுப்பதற்கில்லை. அவை தண்டிக்கப்பட வேண்டியவையான குற்றங்கள் என்றால், அவை தண்டிக்கப்பட வேண்டியவை. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழ் மக்களும் இருக்கின்றார்கள்.

ஆனால், மக்கள் கூட்டங்களுக்கு எதிரான அரச இயந்திரத்தின் அல்லது பௌத்த சிங்கள பேரினவாத இயக்க சக்தியின் திட்டமிட்ட கொடூர குற்றங்களை மன்னிக்க முடியாது. ஏனெனில், தண்டனை என்பது தனி மனிதர்களை கழுவில் ஏற்றுவது அல்ல. தென்னிலங்கையின் மீது பொறுப்புக்களைச் சுமத்தி, ஏற்கனவே நிகழ்ந்தது மாதிரியான குற்றங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதாகும். அதனை, ஹக்கீம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஹக்கீம் இன்னொரு தரப்பின் நிகழ்ச்சி நிரலை எடுத்துக் கொண்டு தமிழ் மக்களிடம் வருவது, தமிழ் – முஸ்லிம் சமூக முரண்பாடுகளை இன்னமும் அதிகரிக்கும். அது, நல்லிணக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும்.

புருசோத்மன் தங்கமயில்