கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வேன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் சாரதி இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தவுலகல பொலிஸ் பிரிவில் மாணவி ஒருவரை வேனில் வந்த சிலர் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் தவுலகல பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதுடன், மாணவி ஹன்தெஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தனது தோழியுடன் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது வேனில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் கடத்தல் சம்பவம் தொடர்பான வேன் பொலன்னறுவை பிரதேசத்தில் வைத்து சம்பவ தினத்தன்று பொலன்னறுவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய வேன் சாரதி பொலன்னறுவை பொலிஸாரினால் கம்பளை பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான வேன் சாரதி கஹடபிட்டிய, கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.
கடத்தப்பட்ட மாணவியை கண்டுபிடித்து, சந்தேக நபரை கைது செய்ய 03 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

