பொன்சேகாவுக்கு புதிய படையணி – டிலான் பெரேரா

209 0

இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் செய்ய தெரியாது. இராணுவம் வேறு, அரசியல் வேறு என்பதை சரத் பொன்சேகாவுக்கு தெளிவுபடுத்தவே,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் நகைச்சுவையாக இராணுவத்துக்கு மீண்டும் செல்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார் என்பதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா விளக்கமளித்துள்ளார்.

இந்த உண்மையை தெளிவுபடுத்தவே கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு சிறிய அறிவிப்பொன்றை வழங்கினார் என பதுளை ஹாலிஎலவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது டிலான் பெரேரா இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

அரசியல் என்பதும், இராணுவ நிர்வாகம் என்பதும் இருவேறானவைகள். இதனால்தான், இராணுவத்திலிருந்து வந்து தேர்தலில் போட்டியிட்டவர்களை மக்கள் புறக்கணித்தனர். ஜனாதிபதியும் இதனைத் தான் சரத்பொன்சேகாவுக்கு நகைச்சுவையாக அரசியலிருந்து விலகி மீண்டும் இராணுவத்துக்கு சேருமாறு சொன்னார்.

இராணுவத்திலிருக்கும் போது அவர்கள் திறமையானவர்கள். அது சரத்பொன்சேகாவுக்கும் பொருந்தும், கோட்டாபயவுக்கும் பொருந்தும், ஏனையவர்களுக்கும் பொருந்தும். இத்தகையவர்கள், அரசியலுக்கு வந்தவுடன், சும்மா அல்ல, நிரந்தரமாகவே சித்தியெய்யாதவர்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா விளக்கமளித்துள்ளார்.

அமைச்சரவையில் என்ன இடம்பெற்றது என்பது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் தெளிவாக கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், அரசாங்க தரப்பிலுள்ள ஸ்ரீ ல.சு.க. மற்றும் ஐ.தே.க.யின் அமைச்சர்கள் ஜனாதிபதியின் கருத்துக்கு பல்வேறு வகையான வியாக்கியானங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.