கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்த் தடுப்பூசி முதலாவது பயிற்சி கிளிநொச்சியில்

365 0

கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி வழங்குதல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தருக்காக விசேட பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சித் திட்டமானது இலங்கையின் சகல மாவட்டங்களிலும் சுகாதார அமைச்சின்தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினரால் நடத்தப்படவுள்ளது.

அதன் அடிப்படையில், கருப்பைக் கழுத்துப் புற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது பயிற்சி வகுப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

(28) கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில், சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்தப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வருடந்தோறும் ஆயிரம் கருப்பை கழுத்து புற்றுநோயாளிகள் மரணிக்கும் நிலையில் அடையாளம் காணப்படுகின்றனர்.

அதாவது வருடாவருடம் ஆயிரம் குடும்பங்கள் தமது தலைவியரை இழக்கின்றன. பல்லாயிரம் குழந்தைகள் தமது தாயாரை இழக்கின்றன.

எனவே இதனை இலங்கையில் கட்டுப்படுத்தும் நோக்கோடு எச்பிவி (HPV) எனும் தடுப்பு ஊசி ஏற்றப்பட வேண்டும்.

எச்பிவி தடுப்பு ஊசி கருப்பை கழுத்து புற்றுநோயிலிருந்து பெண்களை பாதுகாக்கும் எனவும் முக்கியமாக பாடசாலைகளில் ஆறாம் ஆண்டில் பயிலும் மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது.

பத்து, பதினொரு வயது சிறுமிகளுக்கு ஆறு மாத கால இடைவெளியில் இரண்டு தடவைகள் எச்பிவி தடுப்பு ஊசி ஏற்றப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தொற்று நோய் விஞ்ஞான விசேட வைத்திய நிபுணர் தீபா கமகே தெரிவித்துள்ளார்