நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

130 0

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெற்றிப் பெற்றன. இருப்பினும் அவதான நிலையில் இருந்து மீளவில்லை. நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

புது வருட பிறப்பை முன்னிட்டு இன்று காலை நிதியமைச்சில் சுப நேரத்தில் பணிகளை ஆரம்பித்ததன் பின்னர் நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்த்தர்களுடன் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு எவ்வாறு இருந்தது, தற்போது எந்நிலையில் உள்ளோம் என்பதை ஆராய வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெற்றிப் பெற்றுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறும் திட்டங்கள் வெற்றிப் பெற்றிருந்தாலும் அவதான நிலையில் இருந்து மீளவில்லை. ஆகவே அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

பொருளாதார பாதிப்பு மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஏனைய அமைச்சுக்களை காட்டிலும் நிதியமைச்சின் பொறுப்பு மற்றும் வகிபாகம் தவிர்க்க முடியாததாக உள்ளது. கடன் மறுசீரமைப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் வெற்றிப் பெற்றுள்ளன. ஆகவே அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. ஆகவே ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டு மக்கள் நிதியமைச்சின் செயற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அனைவரும் குறிப்பாக அரச உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டு மக்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம்.பொருளாதாரம் மற்றும் மக்களுக்கான நலன்புரி ஆகிய இரண்டையும் சமநிலையான தன்மையில் பேண வேண்டும்.

பொருளாதாரத்துக்கு தாக்கம் செலுத்தும் வகையிலான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க முடியாது . பொருளாதார முன்னேற்றத்துக்கு மாத்திரமே அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.