10 ஆயிரத்து 400 மெற்றிக்தொன் அரிசி முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்படும்

160 0

இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 10 ஆயிரத்து 400 மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் 7 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (01)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சந்தையில் நிலவும் அரிசி தட்டப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய முதலாவதாக விலைமனுகோரல் செய்யப்பட்ட 5200 மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் 10400 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும்.

இரண்டாம் கட்டமாக 28 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை  இம்மாதம் நடுப்பகுதியில் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தையில் நிலவும் அரசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரமளவில் தீர்வு எட்டப்படும்.

அரச கட்டமைப்பின் ஊடாக நாடு அரிசி மாத்திரமே இதுவரையில் இறக்குமதி செய்யப்படும். தனியார் துறையினர் சுமார் 80 ஆயிரம் மெற்றிக் அரிசி இறக்குமதி செய்துள்ளனர்.

அரிசி இறக்குமதிக்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்ட காலவகாசம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடையும். அரிசி விற்பனை தொடர்பிலான கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாகவே சந்தையில் அரிசியை விநியோகிக்க வேண்டும் என்றார்.