பொதுமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை கையளிப்பதே சுகாதார அமைச்சின் முதன்மையான கடமை

96 0

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபடும் பொதுமக்களுக்கு நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை கையளிப்பதே சுகாதார அமைச்சின் முதன்மையான கடமை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ஊழியர்கள் புத்தாண்டு தினத்தில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு ஆகியன 41 நிறுவனங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அமைச்சாக உள்ளது.

எதிர்வரும் நாட்களில் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை இவ் அமைச்சுக்களின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.

அத்தோடு தனி அமைச்சுக்காளாக இருந்த சுகாதாரம், தேசிய மருத்துவம், வெகுசன ஊடகம், தபால் மற்றும் தொலைத் தொடர்பு ஆகியன சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் ஒன்றிணைக்கப்படும்.

அதற்கேற்ப இவ்வமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பொறுப்புகளும் அதிகமாக உள்ளன. மறுமலர்ச்சி யுகத்துக்காக இந்நாட்டு மக்கள் எமது கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர்.

ஆகையால் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கத்தால் செயற்திறன் மிக்க வேலைத்திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதே புதிய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்திகளில் முதன்மையான திட்டமாகும்.

தற்போது அதற்குரிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கான இலக்குகள் வழங்கப்படுள்ளன.

இந்த இலக்குகளை பின்பற்றி சுகாதார அமைச்சும் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபடும் பொதுமக்களுக்கு நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை கையளிப்பதே சுகாதார அமைச்சின் பிரதான பணியாகும்.

சுகாதார அமைச்சின் கீழ் பணிபுரியும் சுமார் ஒன்றரை இலட்சம் ஊழியர்களும் விழிப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். சுகாதார சேவையை இலபகரமான சேவையாக அரசாங்கம் ஒருபோதும் கருதவில்லை.

இது மக்களுக்கான பொது சேவையாகும். மக்களின் உழைப்பால் கிடைக்கும் பணத்தையே சுகாதார சேவைக்காக அரசாங்கம் செலவிடுகிறது என்றார்.