வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு மன்னாரில் நடைபெற்றது

210 0
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் 08 ஆவது அமர்வு 28-04-2017 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது தலைமையில் சபையின் கெளரவ உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மான்னர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த அமர்வில் பல விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது, அந்தவகையில்  குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்துகளுக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்வதற்கான உள்ளூராட்சி ஆணையாளர் எம்.பற்றிக் நிரஞ்சன் அவர்களது தலைமையில் மூன்றுபேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவிற்கு எவ்விதத்தில் குறித்த விசாரணைகளை மேற்கொள்வது எனபது தொடர்பாகவும் அமைச்சர் ஆலோசனை வழங்கியதாகவும், அத்தோடு விரைவாக அங்கு காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரசபையின் தலைவருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அதனைத்தொடர்ந்து வவுனியா மத்திய பேரூந்து நிலையம் மீள இயங்கவைப்பது தொடர்பாகவும், வடக்கில் அறுபதுக்கு நாற்பது என்ற விகிதாசார அடிப்படையில் பேரூந்து சேவைகளை வழங்குவதற்கான இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தல் தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வர்த்தமானி பிரசுரத்திற்கு அனுப்பிவைப்பதற்கான பணிப்புரையை அமைச்சர் அவர்கள் செயலாளருக்கு வழங்கியிருப்பதாகவும், அதேவேளை அதிகாரசபைக்கான 63 புதிய ஆளணிகளை நியமிப்பதற்கான ஆளணி முகாமைத்துவ சேவையின் அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான ஆளணிகளை தெரிவுசெய்வதற்கான சேவைப்பிரமாண கோவையின் அடிப்படையிலான நியமங்கள் வகுக்கப்பட்டுள்ளநிலையில் அவற்றை உரிய நடவடிக்கைகளுக்கு அனுப்புமாறும் பணித்ததோடு, முச்சக்கரவண்டிகளை அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்வதற்கான ஒழுங்குவிதிகளை விரைவாக தயாரிக்குமாறு அதிகாரசபையின் தலைவர் அவர்களுக்கு பணிப்புரைவழங்கியுள்ளதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றது.
குறித்த அமர்வில் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், அதிகாரசபையின் தலைவர் ஏ.நிக்கொலஸ்ப்பிள்ளை, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கே.பிரபாகரமூர்த்தி, சட்ட வழக்கறிஞர் இ.கயஸ்பெல்டானோ, வி.வி.இந்திரஜித் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், எம்.பற்றிக் டிறஞ்சன் உள்ளூராட்சி ஆணையாளர் வடக்கு மாகாணம், பி.எம்.இப்திகார் நடவடிக்கை இயக்குனர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, உபாலி கிருபத்தொடுவ வடக்கு பிரதம பிராந்திய முகாமையாளர் இலங்கை போக்குவரத்து சபை, எம்.ரவீந்திரன் குரூஸ் இயந்திர பொறியியலாளர் வீதி அபிவிருத்தி திணைக்களம், சி.சிவபரன் தலைவர் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.