Onmax DT பிரமிட் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த வைப்பாளர்களால் இதுவரை 2017 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அதன்படி அவர்கள் இழந்துள்ள தொகை 2.96 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த வழக்கு திகதி முதல் தற்போது வரை சம்பந்தப்பட்ட முதலீட்டு முறையில் பணத்தை வைப்பீடு செய்து பணத்தை இழந்த 865 பேர் இந்த முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதுடன் தொடர்ந்தும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது, நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உட்பட ஒன்பது சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இதேவேளை, மேலும் மூன்று சந்தேகநபர்கள் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சந்தேகநபர்களில் இருவரது விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த விடயம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

