இந்திய – இலங்கை பிரதமர்கள் சந்திப்பு – சீனா தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம்

520 0

இந்திய – இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது சீனா தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க இலங்கை முயற்சிக்கின்றமை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துறைமுகம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுமே தவிர, இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என பிரதமர் ரணில் இதன்போது உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, புதிய சுதந்திர வர்த்தக வலய உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா அவதானமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தொட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகளை நிறுவும் வகையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான புதிய சுதந்திர வலய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த நிலையில், அங்கு உற்பத்தியாகின்ற சீன பொருட்கள், இலங்கையுடனான சுதந்திர வர்த்தக வலய ஒப்பந்தத்தின் ஊடாக இந்திய சந்தைக்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக இந்தியா கருதுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.