பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை

267 0

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அடுத்த மாதம் (மே) வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

இதற்கிடையே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தனியார் பள்ளிகளில் குறிப்பாக மெட்ரிகுலேசன் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு (2018) எழுதும் தேர்வுக்கு இப்போதே பாடம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடந்து வந்த நிலையில், இந்த ஆண்டில் இருந்து (2017) மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வு நடத்தப்பட உள்ளது.

இருப்பினும் பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதால் தங்களது பள்ளிகளுக்கு பெருமை சேருவதோடு, மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதால் பள்ளிகளில் இந்த கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பள்ளிகள் நடத்தும் இந்த சிறப்பு வகுப்புகளுக்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், ‘யாரும் இந்த கோடை காலத்தில் அல்லது பள்ளி விடுமுறை நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது.