தமிழக நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது

297 0

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆணையர்களுக்கு 21-ந் தேதி நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘கழிவுநீர், குடிநீர் குழாய்களை சாலையோரம் அமைக்க பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் கால தாமதத்தையும், கூடுதல் செலவையும் தவிர்க்க, நகர் பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளை மாநகராட்சிகள், நகராட்சிகள் தங்கள் வசம் கொண்டுவர மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆணையர்கள் தீர்மானம் இயற்ற வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க.வை சேர்ந்த வக்கீல் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.

ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு மதுபான கடைகள் இருக்கக்கூடாது என்று மார்ச் 31-ந் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல் இழக்கச்செய்யும் விதமாக, நகரப்பகுதியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சிகள், நகராட்சிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டவிரோதமானது.

இதன் மூலம் நெடுஞ்சாலைகளை எல்லாம், உள்ளாட்சி அமைப்புகளின் சாலை என்று அறிவித்து, அங்கு ஏற்கனவே இருந்த மதுபானக்கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கையுடன், பா.ம.க.வை சேர்ந்த கே.பாலுவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், என்.எல்.ராஜா ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அப்போது நீதிபதிகள், ‘நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கொண்டு வருவது குறித்து நாங்கள் தற்போது கருத்து எதுவும் கூறவில்லை. ஆனால், அப்படி உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த சாலைகளை கொண்டு வந்த பின்னர், ஏற்கனவே இருந்த இடத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மீண்டும் திறக்க மாட்டோம் என்று தமிழக அரசு சார்பில் நீங்கள் உத்தரவாதம் அளிக்க முடியுமா?’ என்று அட்வகேட் ஜெனரலிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு நாளை (இன்று) தெரிவிப்பதாக கூறினார். இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘அப்படி உத்தரவாதம் இப்போது அளிக்க முடியவில்லை என்றால், தடை உத்தரவு பிறப்பிப்பது தவிர வேறு வழியில்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.

அப்போது மூத்த வக்கீல் வில்சன் குறுக்கிட்டு, ‘தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்புகளின் வசம் எடுத்துக்கொள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. தமிழக அரசு மீண்டும் டாஸ்மாக் கடைகளை பழைய இடங்களில் திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு உத்தரவை உள்நோக்கத்துடன் பிறப்பித்துள்ளது’ என்றார்.

அப்போது அட்வகேட் ஜெனரல் குறிப்பிட்டு, ‘பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நெடுஞ்சாலைகளை, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது, இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது. எனவே, நெடுஞ்சாலைகளை, மாநகராட்சிகள், நகராட்சிகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது சட்டவிரோதம் இல்லை’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு நிர்வாக காரணங்களை கூறி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல் இழக்கச்செய்யும் விதமாக நிர்வாக ரீதியான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. எனவே, தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரமாக மதுபான கடைகள் செயல்பட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதால், அதற்கு எதிராக நிர்வாக உத்தரவு என்ற போர்வையில் தமிழக அரசு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.

அதனால், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரமாக மதுபான கடைகளை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை 3 மாதங்களுக்கு, அல்லது இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிலுவையில் இருக்கும். இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை ஜூலை 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.