தமிழக பெண்களை அவதூறாக பேசிய கேரள மந்திரியை கைது செய்யவேண்டும்: ராமதாஸ்

223 0

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள மந்திரியை கைது செய்ய வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை கேரள மின்துறை மந்திரி எம்.எம்.மணி மிகவும் அவதூறாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். பெண்மையை இழிவுபடுத்திய அவரை கேரள அரசு தண்டிக்காமல் பாதுகாப்பது வருத்தமளிக்கிறது.

உலகில் எங்கெங்கோ பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மற்றும் அவதூறுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ் பெண்களுக்கு எதிரான இந்த கொடுமைக்கு எதிராக மட்டும் வாயை இறுக கட்டிக் கொண்டு மவுனம் கடை பிடிக்கிறது.

பெண்களை மதிக்காத எந்த சமுதாயமும் முன்னேறியதாக வரலாறு இல்லை. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைமை உணரவேண்டும். தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.எம்.மணியை கேரள முதல்-மந்திரி உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும். அதுமட்டுமின்றி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய எம்.எம்.மணி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354-வது பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.