உயிர் விதைத்த மண்ணில் உதைபந்தாட்டமா?

580 0

முள்ளிவாய்கால் தமிழின விடுதலைப்போருக்கான ஒருமுற்றுப்புள்ளியாய் போனதா? முடிவிலியாய் போனதா? என காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த விடுதலைவிருச்சம் முள்ளிவாய்காலில் ஆணிவேர் அறுபட்டு சாய்ந்ததோ? உயிர்வேலியிட்டு காத்த விடுதலை விருட்சம் முள்ளிவாய்காலில் மூச்சடங்கி போனதோ!

வலிகளையும் வடுக்களையும் தாங்கிய எஞ்சிய மக்கள் முள்ளுவேலிக்கு அடைபட்டு. சொந்த இடம்நோக்கி சிறகு விரித்த போது அகலவிரிக்க முடியாது ஆக்கிரமிப்பாளர்களின் பாதங்களில் சொந்தமண்.

ஆயுதம் தரித்த காவலர்கள் அமரத்துவம்ஆனதால் “வெள்ளவேட்டிக்காரர் ” எமது மீட்பர்கள் என தம்மை அடையாளப்படுத்தினர். எம் காவல் தெய்வங்கள் தம்மைத்தான் கூட்டமைத்து எம்மக்களின் பாதுகாவலராக பலப்படுத்தி விட்டுசென்றனர் என மொழிந்தனர்.

வீடிழந்த நாம் நிழல் வீட்டில் குடிபுகுந்தோம்! காட்சிப் பிழைகளை கண்டுகொண்டோம்.
நெடுந்துயர் கொண்ட உயிரை பிழிந்தெடுங்கும் “ மே 18 ” உலகத்தில் மனித இனம் வாழுவரை தமிழினத்தின் இதயங்களில் இறுகிவிட்ட இந்த இனத்துயர நாளில் அன்றில் இருந்து இன்றுவரை சிறீலங்கா அரசுக்கு துணைபோகும் அதாவது காக்கை வன்னியனின் வேலையை கச்சிதமாக செய்து வரும் மாவிட்டபுரத்தான். 2017 மே 16 இல் இருந்து மே19 வரை உதைபந்தாட்டப் போட்டி வைத்து கழியாட்ட விழா நடத்தவுள்ளார். மே 18 இல் முள்ளிவாய்கால் நினைவேந்தலும் செய்யப்போகின்றார்களாம்.

இதயங்களை தொலைந்து விட்டு இடிவிழுந்து நின்ற இரணைப்பாலையில் கழியாட்ட விழாவிற்கான மைதானமாம் . அதற்கு அருகில் தான் இறுதி நாட்களில் ஒருதுயிலும் இல்லம் உருபெற்றது . உயிர்கள் உறைந்து போன வன்னி மண்ணில் குறிப்பாக மே16 தொடக்கம் மே19 வரை உணர்வுகளின் சங்கமாய் விடுதலையின் விலையை எம் இளைய தளிர்களுக்கு புரியவைக்கும் இப்புனித நாட்களில் வெள்ளை வேட்டிகாரனின் துரோக்த்தனம் கோலோச்சுகிறது.  இது தமிழினத்தின்  சாபக்கேடு.