எடப்பாடி பழனிசாமி பாதுகாப்புக்கு அதிக போலீசார் குவிப்பு: அன்புமணி ராமதாஸ்

232 0

முதல்-அமைச்சர் பழனிசாமி தேவையின்றி அதிக எண்ணிக்கையில் போலீசார் குவித்துக் கொள்வதை கைவிடவேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் இருந்து வீடு செல்வதற்காக அண்ணாசாலையில் மட்டும் 10 அடிக்கு ஒருவர் வீதம் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சாலைகளில் பல இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அண்ணாசாலையில் பயணம் செய்த மக்கள் தேவையற்ற இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளானார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை. எனினும், முதல்-அமைச்சர் என்ற முறையில் அவருக்கு குறிப்பிட்ட அளவில் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவதிலும், அவருக்கு தடையற்ற வழித்தடத்தை ஏற்படுத்தித் தருவதிலும் எந்த தவறும் இல்லை.

மாறாக தமது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக போலீசாரை பிற பணிகளுக்கு அனுப்பாமல் தமது பாதுகாப்புக்காக நிறுத்திவைத்து காவல்துறையின் வலிமையை தவறாக பயன்படுத்துவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்; மன்னிக்க முடியாத குற்றம்.

எனவே, முதல்-அமைச்சர் பழனிசாமி தேவையின்றி அதிக எண்ணிக்கையில் போலீசார் குவித்துக் கொள்வதை கைவிடவேண்டும். பதவியில் இருக்கும் வரை எளிமையாகவும், மக்களுக்கு இடையூறின்றியும் நடந்துகொள்ள முன்வர வேண்டும்.