விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முழு அடைப்பு போராட்டம்: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்

292 0

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் ஈடுபடவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
தி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தியேட்டர்களில் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள்.
இதனிடையே, ”முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சென்னை, எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். மத்திய அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் கணிசமான அளவில் இயங்கும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. முழு அடைப்பில் கலந்து கொள்ளவில்லை. வழக்கம் போல் பஸ்களை இயக்க தமிழக அரசு
முடிவு செய்துள்ளது.
முழு அடைப்பு போராட்டம் – இயங்குவதும், இயங்காததும்…
இயங்கும் :
பெட்ரோல் பங்குகள்
கல்லூரிகள்
தபால் அலுவலகங்கள்
வங்கிகள்
மெட்ரோ உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகள்
தனியார் அலுவலகங்கள்
மருந்தகங்கள்
இயங்காது :
பெரும்பாலான அரசு பேருந்துகள்
கடைகள்
ஆட்டோக்கள்
4 லட்சம் சரக்கு லாரிகள், 65 ஆயிரம் மணல் லாரிகள்
பால் விநியோகம் (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை)
படப்பிடிப்புகள் ரத்து
திரையரங்குகளில் பகல் இரண்டு காட்சிகள் ரத்து