விமல் வீரவங்சவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு!

225 0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட 7 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 06ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, ஹெவ்லொக் வீதி மற்றும் பௌத்தாலோக்க மாவத்தை ஆகிய வீதிகளில் போக்குவரத்துக்கு தடையேற்படுத்தியதால், பொதுமக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரட்ன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில், சந்திம ஜயலால் ஆகியோர் வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 7வது சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அந்த சந்தேக நபரையும் தேடி கண்டுபிடித்து வழக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.