‘சமத்துவ நெறியைப் போற்றுவோம்’ – வள்ளலார் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

18 0

“உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்” என ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5) கொண்டாடப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5, ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (அக்.5) முதல்வர் தனது எக்ஸ் தளத்தில், “நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
“உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!” “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்! வாழ்க வள்ளலார்!” எனப் பதிவிட்டுள்ளார்.

ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பற்றி.. l சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்தார். குழந்தைகளுடன் தாய் சென்னை அடுத்த பொன்னேரியில் குடியேறினார். பின்னர் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.

l தமிழ் அறிஞரான அண்ணனிடமே கல்வியைத் தொடங்கினார். பின்னர், தக்க ஆசிரியர்களிடம் பயின்று, தமிழ் அறிவை வளர்த்துக்கொண்டார். ஆன்மிகச் சொற்பொழிவாளரான அண்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லை. முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பிவைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.

l ஒருமுறை கோயிலில் இருந்து நள்ளிரவில் வீடு திரும்பியவர், அண்ணியை எழுப்ப மனமின்றி வீட்டு திண்ணையில் பசியோடு படுத்துவிட்டார். அவருக்கு அம்பிகையே நேரில் வந்து அறுசுவை உணவு பரிமாறியதாக நம்பப்படுகிறது.

l சைவம், வேதாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், தமிழ் இலக்கிய நூல்களை ஆராய்ந்தறிந்தார். பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்’ என எடுத்துக் கூறினார்.

l ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்று மாற்றினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே. உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்’ என உபதேசித்தார்.

l பெண் கல்வியைப் போற்றினார். யோக சாதனப் பயிற்சி பெண்களுக்கும் அவசியம் என்றார். அனைவரும் தமிழ், ஆங்கிலம், வடமொழி கற்க வலியுறுத்தினார். திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.

l சிறு வயதிலேயே சிறப்பாக கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். முருகனை வாழ்த்தி ‘தெய்வமணி மாலை’ என்ற பாமாலையை இயற்றினார். இவர் பாடிய ‘திருவருட்பா’ 6 திருமுறைப் பகுதிகளாக 399 பதிகங்கள், 5,818 பாடல்களைக் கொண்டது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள்.

l தண்ணீரில் விளக்கை எரியச் செய்தது உட்பட பல அற்புதங்களை இவர் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. 1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே இரவில் பாடி முடித்தார். சஞ்சீவி மூலிகைகள் குறித்து பல குறிப்புகளை எழுதியுள்ளார்.

l வடலூரை சேர்ந்த விவசாயிகள் 80 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அங்கு 1865-ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலையை அமைத்தார். அங்கு ஏழைகளின் பசியாற்றினார். அதனால் ‘வள்ளலார்’ எனப் போற்றப்பட்டார்.

l வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மிக்கவர். ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை’ என்று இறைவனை ஜோதி வடிவில் கண்ட ராமலிங்க சுவாமிகள் 51-வது வயதில் (1874) இறை ஜோதியில் ஐக்கியமானார்.