வடக்கில் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது – வடக்கு கல்வி அமைச்சின் செயலர்

199 0
வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக மாற்றப்பட்டு அத் திட்டத்திறுள் வருகின்ற ஆரம்ப பாடசாலைகள் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகளாக  அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான முன்னோடிக் கலந்துரையாடலும் மாகாண கல்வி அமைச்சில்  இடம்பெற்றது.
இதற்காக வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களின் கீழ் உள்ள 35 கோட்டங்களிலும் இருந்து தலா 2 பாடசாலைகள் வீதம் மொத்தம் 70 பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளில் விசேட விளையாட்டு மைதானம் , பொழுது போக்கு கூடம் உள்ளிட்ட சகல வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படுவதோடு இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றும் அமைக்கப்படும்.
இவ்வாறு தேர்வு செய்த 70 பாடசாலைகளில் 29 பாடசாலைகளிற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஆண்டில் 25 கட்டிடங்கள் கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டதற்கினங்க 12 பாடசாலைகளிற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு விட்டது. அதேபோன்று மேலும் 13 பாடசாலைகளிற்கான கட்டிடங்கள் அமைக கும் பணிகளும் யூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் பாடசாலைகளுல் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள். குறித்த திட்டம் வட மாகாணத்தின் 35 கோட்டத்திலும் ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட அணைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது. கல்வியை மேம்பட வைக்கும் நோக்கில் ஆரம்பக் கல்வியில் இருந்தே மேம்படுத்துவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும். என்றார்.