நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மீரிகம, பொகலகம பிரதேசத்தில் இரண்டு கட்சி அலுவலகங்களும், திவுலபிட்டிய கித்துல்வல பிரதேசத்தில் உள்ள கட்சி அலுவலகமும் தீயிட்டு எரிக்கப்பட்டிருப்பதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கித்துல்வல கிந்தம்மாமன சந்தியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் ஒன்றின் பெயர் பலகைகள் தீயினால் சேதமடைந்திருப்பதுடன், ஒன்றரை கிலோமீற்றர் தொலையில் உள்ள ஹெய்டிவல கிராமத்தில் உள்ள அலுவலகத்தின் பெயர் பலகைகளும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
அந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள மற்றுமொரு அலுவலகத்தின் பெயர்ப்பலகைகளும் எரிக்கப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பில் பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அதேவேளை கடந்த வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேபோன்று மேற்குறிப்பிட்ட 240 முறைப்பாடுகளில் 99 முறைப்பாடுகள் குற்றவியல் குற்றங்களுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இக்காலப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான 6 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

