யாழ். குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்பு – சுவாமிநாதன்

569 0

DM_Swaminathanயாழ். குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்புத் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் நில விடுவிப்பிற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தமை தொடர்பில் கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் பலவற்றை விடுவிக்குமாறு கோரப்பட்டது.
அதன்பிரகாரம் யாழில் அடுத்த கட்டமாக விடுவிக்கப்படக் கூடிய நிலத்தினை இனம்கண்டு மீள்குடியேற்ற அமைச்சு சிபாரிசு செய்தது. அதனை பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுக்காக அவர்களிடத்திலும் சமர்ப்பிக்கப் பட்டு கடந்த சனிக்கிழமை சம்மந்தப்பட்ட சகல தரப்பினரும் இணைந்து குறித்த பிரதேசங்களை நேரில் ஆய்வு செய்துள்ளோம்.
இதன் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சும் தனது சிபாரிசை வழங்கிய பிரதேசங்கள் அமைச்சரவையின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டு அப் பிரதேசங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்படும்.
அதற்கு அடுத்த படியாக முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பிலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அங்கும் சில பிரதேசங்கள் விடுவிக்கப்படுவதற்காக எமது அமைச்சின் சிபாரிசினை வழங்கியுள்ளோம்.
அவை தற்போது பாதுகாப்பு அமைச்சின் பரிசீலணையில் உள்ளது. அவர்களின் சிபாரிசும் கிடைக்கப் பெறுமிடத்தில் அந்த நிலங்களும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இருப்பினும் எவ்வளவு நிலத்திற்பான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கும் எனத் தெரிகின்ற வரையில் அளவினை உறுதிபடத்தெரிவிக்க முடியாதபோதிலும் யாழ்ப்பாணம் வலி வடக்கிற்கு அடுத்தபடியாக முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலங்களும் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.