இந்திய உயர்ஸ்தானிகர் – பழனி திகாம்பரம் இடையே விசேட சந்திப்பு

139 0

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கிடையில் செவ்வாய்கிழமை (13) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கான திட்டங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் பதிவில், ‘ உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தை சந்தித்தார். இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களின் நலனுக்காக இலங்கையில் இந்தியா மேற்கொண்ட பல்வேறு இருதரப்பு முயற்சிகள் உட்பட பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்ஸ்தானிகருடன் தனித்து இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் பழனி திகாம்பரத்திடம் வினவிய போது, ‘இதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருடன் இணைந்து உயர்ஸ்தானிகரை சந்தித்திருக்கின்றோம். அதன் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணி சந்தித்த போதிலும், அந்த சந்திப்பில் எனக்கு பங்கேற்க முடியாமல் போனது. எனவே தான் மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.’ எனத் தெரிவித்தார்.