ஓ.பன்னீர்செல்வத்திடம் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம்: அமைச்சர் உதயகுமார்

265 0

விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு ஓ.பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை அவரை பார்த்துத்தான் நாங்கள் கற்றுக் கொண்டோம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது அமைச்சர் உதயகுமார் சசிகலா அணியில் இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக இருந்த போது கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று முதல்முதலில் அவரே குரல் கொடுத்தார்.

இதன் பின்னரே சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த நிலையில் அ.தி.மு.க. வில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக விலக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.துணை பொதுச்செயலாளராக இருக்கும் டி.டி.வி. தினகரனை விலக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளவுபட்ட இரண்டு அணிகளும் ஒன்று பட்ட அ.தி.மு.க.வாக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர் செல்வம் ஆவார். அவர்தான் சசிகலா எதிர்ப்பை முதன் முறையாக கையில் எடுத்தார். அதன் பின்னரே அவரது கருத்துக்கு ஆதரவாக குரல் எழும்பியது. அ.தி.மு.க. இரண்டாக உடைவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது.

இந்த நிலையில் சசிகலா அணியில் இருந்த அமைச்சர்களே அவரது குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக விலக்கி வைக்க முடிவெடுத்திருப்பது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.கட்சி பிளவுபட்ட போது ஓ.பன்னீர்செல்வம் மீது சேற்றை வாரி வீசிய சசிகலா அணியினர் தற்போது அவரது புகழ் பாட தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் இன்று ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுயதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் முக்கியம். இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட முடிவு இது.கட்சி, ஆட்சியை காப்பாற்ற தியாகம் செய்ய அனைவரும் முடிவு செய்துள்ளோம். ஜெயலலிதா தொடங்கிய திட்டங்கள் தொடர வேண்டும் என்பதால் அனைவரும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். தியாகத்திற்கு வரையறை கிடையாது. கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதே நோக்கம்.

விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு ஓ.பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை அவரை பார்த்துத்தான் நாங்கள் கற்றுக் கொண்டோம்.இவ்வாறு உதயகுமார் கூறினார்.