ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றபோது வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது. அது இக்குடிநீர் திட்டத்தின் மூலம் வெள்ளிக்கிழமை (03) முதல் இது 40 சதவீதமாக உயர்வடையும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
குடிநீர் அடிப்படை உரிமையாகும். அதை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, செலவு அதிகமாக இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்த இந்த சவாலை ஏற்றுக்கொண்டோம்.
ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றபோது வடக்கில் குடிநீர் விநியோகம் 4 சதவீதமாகக் காணப்பட்டது. இன்று முதல் இது 40 சதவீதமாக உயர்வடையும். இந்த திட்டத்துக்கு பல கிராமங்கள் காணிகளை கொடுக்க விரும்பவில்லை. இருப்பினும் இந்த காணியை வழங்கிய தாளையடி கிராம மக்களுக்கு நன்றி என்றார்.
அதேவேளை நிகழ்வில் உரையாற்றியான கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,
தமிழ் மக்களுக்கு வளர்ச்சி தாகம், உரிமை தாகம், குடிநீர் தாகம் என பல தாகங்கள் உள்ளன. இந்த தாகங்களுக்கு ஜனாதிபதி தீர்வுகளை வழங்கி வருகின்றார். இன்று வடக்கு மக்களுக்கான குடிநீர் உரிமையை வழங்குவதற்காக வந்துள்ளார். இந்த மாகாண மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் என்றார்.

