போலி கடவுச்சீட்டுகள் மூலம் புலம்பெயர் இலங்கையர்களின் வாக்குகளை சூறையாடத் திட்டமா?

108 0

ஜனாதிபதித்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்களைப் போலியாக அச்சடித்து, அவர்களின் வாக்குகளை சூறையாடும் மோசடித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மற்றும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மோசடி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என இதுவரை இல்லாத சட்டம் திடீரென கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், யாரேனும் ஒருவர் வேறொரு பிரதேசத்தில் வாக்களிக்கும்போது அவரை அடையாளங்காணமுடியாவிடின், அவரது கடவுச்சீட்டை சரிபார்த்து அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் குயஉவ ளுநநமநச தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் வினவியபோது, நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக வாக்காளர்களுக்கு வேறொரு இடத்திலிருந்து வாக்களிக்க வாய்ப்பு இருந்ததாகவும், அது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘அச்சட்டத்தின்படி உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சமுடைய எந்தவொரு வாக்காளரும் தனது வாக்களிப்பு நிலையத்தை தவிர வேறு இடத்தில் வாக்களிக்கக் கோரலாம். அவர்கள் கோரும் வாக்களிப்பு நிலையத்தை வழங்கவேண்டும் என்ற விதி எதுவும் இல்லை. இருப்பினும் பாதுகாப்பான வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பாகும்’ எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும், தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல்கள் திணைக்களம்  இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவது வழக்கம் எனவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

அத்தோடு வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான வாக்களிப்பு முறைமை இதுவரையில் தயாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிறைச்சாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மூட முடியாது. அந்த அதிகாரிகளுக்கு ஒரே நாளில் வாக்களிக்க வாய்ப்பளிக்க முடியாது. தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களினால் தபால்மூல வாக்குகளை செலுத்த முடியும் என்பதனால், முந்திய வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலம் செலவுகளை குறைக்கும் சாத்தியம் காணப்படுகிறது’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிடம் குயஉவ ளுநநமநச வினவியபோது அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வருவோரிடம் தரகர்களைப் பயன்படுத்தி இலஞ்சம் வாங்க முனைவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதனைத் தடுத்து கடவுச்சீட்டு வழங்கல் செயன்முறையை வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தும் நோக்கில் ‘இலத்திரனியல் கடவுச்சீட்டு’ பெறும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், இதனூடாக 3 நாட்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.