மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவின் போது காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும்

287 0
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவின் போது காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது வரையில் 30 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு இன்று காலையில் மனித உடல் பாகங்கள் சில கிடைத்துள்ளன.
மீட்பு பணிகளில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ண தெரிவித்தார்.
இதனிடையே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 284 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் அவர்களை தேடும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவத்தில் காயமடைந்த 11 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி, 79 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 17 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.