மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரவு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, இருவர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளினால் ஏசியதுடன், தாக்குவோம் என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 56ஆவது நாளாக இன்றும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமக்கான தொழில் உரிமையினை வழங்குமாறு மத்திய, மாகாண அரசாங்கங்களிடம் வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமது போராட்டத்திற்கு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்கமுடியாத சில அரசியல்வாதிகள் தமது அடிவருடிகள் மூலம் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் பட்டதாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்சகோதரிகள் சிலரும் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

