விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 25-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம்

236 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கேரளா, கர்நாடகம் தடுப்பணைகளை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 34-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

கடந்த 1-ந்தேதி தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது விவசாயிகளுக்கு குரல் கொடுப்பதற்காக தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று பெரும்பாலான தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலை 10 மணி அளவில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் 9.20 மணிக்கே அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தார்.

கூட்ட அரங்குக்கு முன்பு, தி.மு.க. முன்னணி தலைவர்களான துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோருடன் காத்திருந்த அவர் கூட்டத்துக்கு வந்த தலைவர்களை வரவேற்று அழைத்து சென்றார்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், கொங்குநாடு முன் னேற்ற கழக கொள்கைபரப்பு செயலாளர் கோவிந்தசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அனைத்துக்கட்சி கூட்டத் தில் 15 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

* 22-ந்தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னையில் நடத்தப்படும்.

* தற்கொலை செய்த விவசாயிகளுக்கு இரங்கல்.

* தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்.

* காவிரி மேலாண்மை வாரியம்- காவிரி ஒழுங்காற்று குழு உருவாக்க வேண்டும்.

* அனைத்து தரப்பு விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

* விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

* நெல், கரும்புக்கு நியாய விலை வழங்க வேண்டும்.

* அனைத்துக்கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.

* குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

* நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து தமிழக அரசியல் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

* மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

* மீத்தேன்- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்.

* வறட்சி நிலவும் இந்த நேரத்தில் ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழகத்தை தேசிய பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

* சாமளாபுரத்தில் பெண்கள் மீது காவல்துறை நடத் திய தடியடிக்கு கண்டனம்.