மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை: மத்திய மந்திரி ஜே.பி. நட்டா

280 0

மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதாவினரை தயார் படுத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவிலம் பாக்கத்தில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மத்திய மந்திரி ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளாக மாற்றத்தை நோக்கி பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. எவ்வளவு உயர் அழுத்தமான மின்சாரம் இருந்தாலும் அதை பிரித்து வழங்க டிரான்ஸ்பார்மர்கள் தேவை. அதே போல் தான் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

குழந்தைகள், முதியோருக்கான திட்டங்கள், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள், 12 ரூபாயில் காப்பீட்டு திட்டம் என்று பல திட்டங்கள் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் முழு அளவில் மக்களை சென்றடைய வேண்டும். சாதாரண மக்களை முன்னேற்றும் பணிகளை, அவர்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரும் திட்டங்களை மோடி அரசு செய்து வருகிறது.

விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. நூறு சதவீதம் பயிர் பாதுகாப்பு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் அந்த திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை. வருகிற காலம் சவாலான காலம். 3 வருடம் பா. ஜனதா அரசில் ஊழல் இல்லை. வளர்ச்சி மட்டுமே இருக்கிறது. இங்கு போகிகளுக்கு வேலை இல்லை. இனி யோகிகளுக்குத்தான் வேலை. இது யோகிகளுக்கான காலம்.

தமிழகத்தில் மந்திரி வீட்டில் கோடி கோடியாக பணம். தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வருகிறது. அரசியலை பயன்படுத்தி இப்படி சம்பாதிப்பது அவமானமானது. மற்ற கட்சிகளுக்கு ஊழல் செய்வதில் தான் போட்டி இருக்கிறது. ஆனால் பா.ஜனதா வளர்ச்சியை நோக்கி போட்டி போடுகிறது.தமிழகத்தில் பா.ஜனதாவை ஒட்டு மொத்தமாக பல கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறோம். அந்த வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக முடிவெடுக்கும் இடத்தில் பா.ஜனதா இருக்கும். 2019 தேர்தலில் தமிழகத்தில்இருந்து கணிசமான எம்.பி.க்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பி.டி. அரசகுமார், அனு சந்திரமவுலி கரு. நாகராஜன், எம்.என்.ராஜா, வக்கீல் தங்கமணி, பாத்திமாஅலி, மாவட்ட தலைவர்கள் டால்பின் ஸ்ரீதரன், மோகனராஜா, தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ், மற்றும் வேளச்சேரி திருப்புகழ், குமார், மடிப்பாக்கம் ஸ்ரீதர், ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.