மன்னாரில் 2900 ஏக்கர் காணி வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடமிருந்து விடுவிக்கப்படவுள்ளது – சாள்ஸ்

249 0
மன்னார் மாவட்டத்தின் பாப்பாமோட்டை , வேட்டையாமுறிப்பு , நாயாற்றுவெளி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கியவகையில் 2 ஆயிரத்து 900ம் ஏக்கர் நிலப்பரப்பில்  6 ஆயிரம் மில்லியன் ரூபா பெருமதியில்   மேற்கொள்ள திட்டமிட்ட நிலப்பகுதியை   வன ஜீவராசித் திணைக்களத்திடம் இருந்து விடுவிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக மன்னார் மாவட்டத்தினில் 6 ஆயிரம் மில்லியன் ரூபாவில் நண்ணீர் மீடி மற்றும் இறால் வளர்ப்பு உள்ளிட்ட 5 கட்டத் திட்டம் மன்னாருக்கு சிபார்சு செய்யப்பட்டிருந்த்து. இவ்வாறு சிபார்சு செய்யப்பட்ட நிதியில்  இந்த ஆண்டிற்காக 700 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டு இதற்கான பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. இவ்வாறு முதல் கட்டமாக  700 மில்லியன் கிடைத்துள்ள போதிலும்  ஏனைய தொகை ஆண்டு ரீதியில் பணிகள் இடம்பெற வழங்குவதாகவும் அணைத்து நிதியும் 5 வருடத்தில் முழுமையாக கிடைக்கும் என  நிதி வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்தே முதல் கட்ட நிதியாக  700 மில்லியன் இந்த ஆண்டு  வழங்கியிருந்தனர்.
இவ்வாறு இந்த திட்டத்தினை முன்னெடுக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் அந்த வேலை வாய்ப்பிற்கு மாவட்ட இளைஞர்களையே நியமிக்கவும் இணக்கம் கானப்பட்டது. மாவட்டத்தில் தொழிலாளர்களைப் பெறமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் மாகாணத்திற்கு உட்பட்ட வகையில் பணியாளர்களை நியமிக்கவும் அணைத்து தரப்புமே இணக்கம் தெரிவித்தே இத் திட்டம் தயார் செய்யப்பட்டது.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட திட்டத்திற்காக பாப்பாமோட்டை , வேட்டையாமுறிப்பு , நாயாற்றுவெளி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கியவகையில் 2 ஆயிரத்து 900ம் ஏக்கர் நிலப்பரப்பும் மாவட்ட நிர்வாகங்களினால் முன்மொழியப்பட்டு அந்த இடங்களை திட்டத்திற்கு நிதி வழங்குநர்களும்   பார்வையிட்டு அவர்களும் ஏற்றுக்கொண்டனர். அவ்வாறான சூழ்நிலையில்  மாவட்டத்தின் அரச அதிபர் ,   பிரதே செயலாளர் மட்டுமன்றி இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளில் எவருக்குமே தெரியாது வன ஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட ஓர் நடவடிக்கை இத்திட்டத்திற்கே  முட்டுக்கட்டையாக அமைந்த்து.
அதாவது வனத்தின் ஜீவராசிகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் எவருக்குமே தெரியாது இப்பகுதிகளில் மிகப் பாரிய அளவான 29 ஆயிரம் கெக்டேயர் அதாவது ஏறக்குறைய 70 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை தமது திணைக்களத்திற்குச் சொந்தம் என 2016ம் ஆண்டில் ஓர் வர்த்தகமானி அறிவித்தலை வெளியீடு செய்திருந்தனர் இவ்வாறு வெளியீடு செய்தமை  மாவட்டத்தின் வேறு எந்த திணைக்களமும் அறிந்திருக்கவில்லை.
இதனால்  வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் வர்த்தகமானி அறிவித்தல் விடுத்திருந்த  பகுதி நிலங்களில் குறித்த நிலத்தினை மட்டும்  எந்தவித தடையும் இன்றி விடுவிக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபர் உட்பட அனைவரும் தெரிவித்திருந்தபோதிலும்  விடுவிக்கப்படாத தன்மையே கானப்பட்டது.  இது தொடர்பில் நாம் மீன்பிடி அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு சென்றபோது மீன்பிடி அமைச்சரும் அதிர்ச்சி அடைந்து மன்னார் மாவட்டமே  வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தம் எனக்கூறி அணைத்து திட்டத்தினையும் அவர்களிடமே வழங்குவதா என கோரியிருந்தார்.
இவை அனைத்திற்கும் குறித்த திணைக்களம் செவிசாய்க்காத நிலையில்   கடந்த மாதம்  மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் நாரா, நெக்டப் அதிகாரிகளுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் வந்து உரிய இடங்களை பார்வையிட்டு சென்றிருந்தனர். இதன்பால் கடந்த அமைச்சரவையில் இது குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு திட்டத்திற்கான 2 ஆயிரத்து 900ம் ஏக்கரை் நிலத்தினையும்  விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் மன்னார் மாவட்டத்திற்கு மிகப்பெரும் திட்டம் ஒன்று கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதனால் மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளிற்கு வேலை வாய்ப்புக் கிட்டும்  என்றார்.