வலி வடக்கில் சொந்த காணி இல்லாதவர்களாக 114 பேர் பதிவுகளைமேற்கொண்டுள்ளனர்- யாழ் அரச அதிபர்

247 0
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களில் சொந்தக் கிராமத்திலும் நிலம் அற்றவர்கள் 2 பரப்புக்காணி விலைக்கு வாங்கும் திட்டத்திற்கு 114 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது முகாம்களில் வசிக்கும் மக்களில் சொந்தக் கிராமத்திலும் நிலம் அற்றவர்கள் நிரந்தரமாக காணியினை விலை கொடுத்து வாங்கி குடியேற விரும்புகின்ற பட்சத்தில் 2 பரப்புக் காணிக்குரிய பணத்தினை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக யாழ். மாவட்டச் செயலகம் வழங்கி வருகின்றது.
அவ்வாறு வழங்கப்படும் வணிக்காக பரப்பு ஒன்றிற்காக கூடிய பட்சம் 2 லட்சம் ரூபா என்ற அடிப்படையில் மொத்தம் 4 லட்சத்திற்கு மேற்படாத தொகை வழங்கப்படுகின்றது. இவ்வாறு காணிகளை பெற்று அதில் நிரந்தரமாக குடியேற விரும்புவோர் பிரதேச செயலகம் ஊடாக மாவட்டச் செயலகத்தில் பதிவினை மேற்கொண்டு தமக்கான காணியினை தேர்வு செய்து மாவட்டச் செயலகத்திற்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.
அவ்வாறு பயணாளி நேரடியாக தேர்வு செய்த காணியினை மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டு பெறுமதி கணிப்பீட்டு அலுவலகத்திற்கு வழங்க கணிப்பீட்டு அலுவலகத்தினால் பெறுமதி கணிக்கப்பட்டு அதற்கான பணம் வழங்கப்படுகின்றது. குறைந்த பெறுமதியான காணியாயின் கணிக்கப்பட்ட பெறுமதிக்கும் அதிக பெறுமதியாயின் உச்ச பட்சம் 4 லட்சம் ரூபாவும் வழங்கப்படுகின்றது.
இதற்கமைய தற்போதுவரையில் மொத்தம் 114 பேர் காணிகளை பெற்று முகாமில் இருந்து வெளியேறி நிரந்தமாக குடியமர சம்மதம் தெரிவித்து பதிவுகளை மேற்கொண்டு பலர் காணிகளை இனம் கண்டு மாவட்டச் செயலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதோடு 6 குடும்பங்கள் காணிகளை பெற்று அதற்கான உறுதிகளும் கைமாற்றப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.