புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருது

345 0

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு வழங்கப்படுகிறது.

அம்பேத்கரின் 127-வது பிறந்தநாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் விவரங்களை திருமாவளவன் நேற்று(14) வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2017-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது புதுவை முதல்-மந்திரி நாராயணசாமிக்கு வழங்கப்படுகிறது. பெரியார் ஒளி விருது ஓவியாவுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது கவிஞர் கலி பூங்குன்றனுக்கும், காமராசர் கதிர் விருது ஹென்றி தியாகராசனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது மவுலவி தர்வேஷ் ரஷாதிக்கும், செம்மொழி ஞாயிறு விருது இளங்குமரனாருக்கும் வழங்கப்படுகிறது. விருதுகள் வழங்கும் விழா மே 4-ந்தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். எங்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் கலந்து கொள்ளும்.

அம்பேத்கருக்கு ஆந்திரா முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு அமராவதியில் 25 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் நினைவு வனம் அமைக்கப்படும் என்றும், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 125 அடி உயர அம்பேத்கர் உருவ சிலை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் அதே போன்று அம்பேத்கர் சிலை அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார்.

பிற மாநில அரசுகள் அம்பேத்கருக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு சிறப்புகளை செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசு அம்பேத்கர் பிறந்த நாளை அலட்சியம் செய்து வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை போல தமிழகத்தில் அனைத்து வசதிகளுடன் அம்பேத்கர் நினைவு பூங்காவும், 125 அடி உயர முழு உருவ சிலையும் அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். ஆணவக் கொலை அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் காவல்துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் பஞ்சாயத்து தலைவர் முருகன் காவல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பாகவே மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கடிதம் கொடுத்துள்ளார். அதிகாரிகளின் அலட்சியத்தால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட கலெக்டரையும், போலீஸ் சூப்பிரண்டையும் உடனே சஸ்பெண்டு செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை முருகனின் உடலை வாங்குவதில்லை என்று அவரது உறவினர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு நிலத்தரகர் சங்க தலைவர் வி.என்.கண்ணன் ஆகியோரும் கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.