நுகர்வோர் பாதுகாப்பு சட்ட திருத்தம் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

107 0

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்தி அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது சுமித் உடுகும்புர எம்.பி. எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தமது கேள்வியின்போது, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள நிலையில் அதன் பிரதிபலன் நுகர்வோருக்கு கிடைப்பதில்லை என்றும் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன எனவும் அவர் வினவினார்.

அது தொடர்பில் அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள நுகர்வோர் சட்டம் கடந்த 20 வருடங்களாக திருத்தம் செய்யப்படவில்லை. தற்போதுள்ள சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அது தற்போது சட்டமா அதிபரின் கவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கான திருத்தங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது குறைவடைந்து வருகின்றன. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. எனினும் நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை பிரிவு அதிகாரிகள் குறைபாடு காணப்படுகிறது. நாடளாவிய ரீதியில் 277 அதிகாரிகளே தற்போது சேவையில் உள்ளனர்.

இந்த நிலையை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் விசாரணை பிரிவு அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்.

விரிவான சந்தை நடவடிக்கைகள் நாட்டில் இடம் பெறுவதால் நுகர்வோருக்கு அநீதி ஏற்படுவதை அறிய முடிகிறது. அதிக லாபத்தை நோக்காகக் கொண்டு வர்த்தகர்கள் செயற்படுகின்றனர். அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.