2024 பெப்ரவரி மாதம் நிறைவடையும்போது ஊழியர் சேமலாப நிதியத்தில் 3912.3 பில்லியன் ரூபாய் இருப்பு காணப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தின் மூலம் அந்த நிதியத்தின் 1958ஆம் ஆண்டு 15ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உட்பட்ட அலுவல்களுக்கு மட்டும் அதனை பயன்படுத்துவதற்கும் வேறு செயற்றிட்டங்களுக்கு அந்த நிதி பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) வாய் மூல விடைக்கான கேள்வி வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி மயந்த திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை, ஊழியர் சேமலாப நிதிக்கு பங்களிப்பு செய்வோர், ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதற்கான தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் தனித்தனியாக உடனடியாக விபரங்களை தெரிவிக்க முடியாதுள்ளது எனவும் அவர் பதிலளித்தார்.

