தேசிய வளங்களை விற்பதற்கு அரசாங்கத்துக்கு வெட்கமென்பது கிடையாதா?

129 0

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு  தேசிய வளங்களை விற்க அரசாங்கத்துக்கு வெட்கமென்பது கிடையாதா? தேசிய வளங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. பெரும்பான்மை உள்ளது என்றால், ஏன் சட்டமூலத்தை இயற்ற அவசரப்படுகின்றீர்கள்? இயற்றப்படும் சட்டங்கள் இன்னும் மூன்று மாதங்களுக்கு பின்னர் மீள்பரிசீலனை செய்யப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றம் வியாழக்கிழமை (06)  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை இரண்டு நாட்களுக்கு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதன்போது மின்சாரத்துறை அமைச்சருக்கும், எதிரணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.

ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து  உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஏதேனும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானத்தையும், அந்த சட்டமூலத்தையும் ஆராய்ந்து துறைசார் மேற்பார்வை குழு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ள நிலையில் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பரிசீலனை அறிக்கையை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் நேற்று சபைக்கு சமர்ப்பித்துள்ளார்.

நிறைவேற்றுத்துறையின் கட்டளைகளுக்கு அமையவே சட்டவாக்கத்துறை தற்போது  செயற்படுகிறது. இந்த சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து விவாதம் செய்வதற்கு போதுமான காலம் வழங்கப்படவில்லை. இந்த சட்டமூலத்தில் 54 ஏற்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் பெரும்பாலான சரத்து விதிகள் அரசியலமைப்புக்கு முரண் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் விதிகளை மீறும் வகையில் ஒருசில ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, இதனை அலட்சியப்படுத்த முடியாது. சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து முறையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சட்டம் படித்தவர்கள் என்று குறிப்பிட்டுக்கொள்பவர்கள் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள 11 பக்க வியாக்கியானத்தை தெளிவாக ஆராயாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.

நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை செயற்படுத்துவதாக அறிவித்துள்ளோம். அத்துடன் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவும் பல திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளன. திருத்த யோசனைகளை நாங்கள் செயற்படுத்துவோம்.

இந்த சட்டமூலத்தை விவாதிக்க நேரம் போதாது என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் இதனை பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் குறிப்பிட்டு விவாதத்துக்கான மேலதிக நேரத்தை பெற்றுக்கொண்டிருக்கலாம். குழுவில் ஒன்றும் பேசாது, சபையில் வந்து ஊடகங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஏதேனும் சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உண்டு. தற்போது இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வியாக்கியானம் முன்வைத்துள்ளது.

மின்சார சபையின் தனியுரிமையை நீக்கி போட்டித்தன்மையுடன் செயற்படும் சூழலை ஏற்படுத்தும் வகையில் இச்சட்டமூலத்தில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து செயற்பட்டன. எதிர்க்கட்சியினரின் நோக்கங்களுக்கு இடமளிக்க முடியாது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க, இந்த சட்டமூலத்தை தொழில்நுட்ப ரீதியில் ஆராய வேண்டும். சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பல திருத்தங்களை முன்வைத்துள்ளது. ஒரு சில திருத்தங்களுக்கு நீதிமன்றம் மாற்று தீர்மானத்தை அறிவிக்கவில்லை. பெரும்பான்மை உள்ளது என்று குறிப்பிடுகின்றீர்கள். அவ்வாறாயின், ஏன் அவசரப்படுகின்றீர்கள் என ஆளும் தரப்பினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இந்த சட்டமூலம் அவசரமாக கொண்டு வந்ததல்ல. இவ்விடயம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெளிவுபடுத்தல் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், எவரும் கலந்துகொள்ளவில்லை. இங்கு வந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இரண்டு நாள் விவாதம் வேண்டும் என்றால் அதனை கட்சித் தலைவர் கூட்டத்தில் குறிப்பிட்டிருக்கலாமே? என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல, இரு நாள் விவாதம் வேண்டும் என்று கட்சித் தலைவர் கூட்டத்தில் நான் வலியுறுத்தினேன். ஆனால், ஆளும் தரப்பு அதற்கு இடமளிக்கவில்லை.

நாட்டின் வளங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. நாட்டை வங்குரோத்து செய்துவிட்டு தற்போது வெட்கமில்லாமல் அரச வளங்களை விற்கிறார்கள். வெட்கம் என்பதொன்று உங்களுக்கு இல்லையா? வெட்கமில்லாமல் இன்றும் ஏன் அரசாங்கத்தில் இருக்கின்றீர்கள். அட்டை பூச்சி போல் இன்றும் ஒட்டிக்கொள்கின்றீர்கள். விட்டுச் செல்லுங்கள் என்று கடுமையாக ஆளும் தரப்பினரை சாடினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, சட்டமூலத்தை தொடர்ந்து விவாதிக்க வேண்டுமாயின், கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கலாம் என்றார். இதன்போது எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்தார்.

‘நீங்கள் அமைதியாக இருங்கள், மரண சங்க தேர்தலில் கூட போட்டியிடாத இவர் பாராளுமன்ற முறைமை பற்றி அறியவில்லை. விசர் பிடித்தவர்கள் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளதால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நான் இருந்திருந்தால், இவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கமாட்டேன் என சபை முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவை நோக்கி கடுமையாக சாடினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த சட்டமூலம் பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஆகவே, நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி, நிதி இராஜாங்க அமைச்சர் சிறுப்பிள்ளைத்தனமான விடயத்தை குறிப்பிட்டார். சட்டமூலம் அரசியலமைப்புக்கு சார்பானதா? அல்லது எதிரானதா? என்பதை மாத்திரமே உயர்நீதிமன்றம் ஆராயும். கொள்கை ரீதியில் பாராளுமன்றமே தீரமானம் எடுக்க வேண்டும். ஜனாதிபதி குறிப்பிடுவதை எல்லாம் கேட்டுவிட்டு இங்கு வந்து கிளிப்பிள்ளை போல் பேசுகிறார் என்றார்.