20 ஆடுகளை சிறிய ரக வாகனத்தில் ‍அடைத்து கடத்திச் சென்ற இருவர் கைது

133 0
அதிகளவிலான ஆடுகளை சிறிய படி ரக வாகனமொன்றில் அடைத்து வைத்து மிக நீண்ட தூரம் கடத்திச் சென்ற இருவரை இன்று காலை மிருக வதைச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதான வீதியில் இன்று (06) அதிகாலை மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் நடத்திய திடீர் தேடுதலின்போது, பொலன்னறுவை மாவட்டத்தின் மிகிந்தலை பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்துக்கு சுமார் 20 ஆடுகளை சிறிய படி வாகனத்தில் கடத்திச் சென்றுகொண்டிருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடுகளையும் சந்தேக நபர்களையும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.