பயங்கரவாத வடிவில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்வி சாரா ஊழியர்கள் தமது தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காக செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும், ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத கல்வி ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தால் அதனை அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களின் தனிப்பட்ட பணத்தைச் செலவழித்து, ஒன்லைன் முறையின் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , எதிர்காலத்தில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நிர்வாக மட்ட அதிகாரிகளின் தொழில்சார் நடவடிக்கையினால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் முழு பல்கலைக்கழக அமைப்பிலும் உடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விரிவுரைகளை நடாத்தும் ஒரேயொரு நிலையம் கலைப்பீடத்தில் உள்ளதனால் தற்போது அதனைத் திறக்க முடியாது என பிரபாத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

