மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவ் இருப்பிடம் தெரியாது

241 0

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவ் தற்போது எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்பது அரசுக்கு தெரியாது என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு உளவு குற்றச்சாட்டின்பேரில், பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் மத்திய அரசின் சார்பில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், “குல்பூஷண் ஜாதவை நாம் திரும்ப கொண்டு வருவதற்கு என்னென்ன செய்வது சாத்தியப்படுமோ அத்தனையும் செய்யப்படும் என்று பாராளுமன்றத்தில் மூத்த மந்திரிகள் தெரிவித்திருக்கிறார்கள். நாங்கள் அதை சாதித்துக் காட்டுவதற்கு முயற்சித்து வருகிறோம். இந்த முக்கிய விவகாரத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்” என்று கூறினார்.

ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “குல்பூஷண் ஜாதவ் தற்போது எங்கு இருக்கிறார், அவரது நிலை என்ன என்பது அரசுக்கு தெரியாது. ஏனென்றால் பாகிஸ்தான் எங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.