சென்னையில் ரூ.24 கோடியில் குழாய் அமைக்கும் பணி: மாநகராட்சியின் 109, 112-வது வார்டுகளில் நடைபெறுகிறது

169 0

தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிவதைத் தடுக்க புதியதாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக 109 மற்றும் 112-வது வார்டுகளில் ரூ.24 கோடியில் பணிகள் நடைபெறுகிறது.

சென்னைக்கு வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. முன்பு தனி வீடுகளாக இருந்தவை இப்போது பன்னடுக்கு குடியிருப்புகளாக மாறிவிட்டன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரின் அளவும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது.இதனால் பல பகுதிகளில் கழிவுநீர் குழாய்களின் கொள்ளளவை தாண்டி வீடுகள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரக் கேட்டால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதுகுறித்து அவ்வப்போது வரும் புகார்களின் அடிப்படையில் சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சிறிய மற்றும் பெரிய கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீரை வெளியேற்றி வருகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரவும் செய்கிறார்கள். இருப்பினும் இந்தப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. எனவே, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண திட்டமிடப்பட்டது.

அதன்படி, பழைய கழிவுநீர் குழாய்களுக்குப் பதிலாக அதற்கு இணையாக தெருக்களின் மையப் பகுதியில் புதிதாக மெகா கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழியும் தெருக்களில் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தயார் நிலையில் இருக்கும் மெஷின் ஹோல்கள்.

இதுகுறித்து சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிதாக பெரிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.