தோற்றுவிடாத எண்ணம்.- – இரா.செம்பியன்

48 0

தோற்றுவிடாத எண்ணம்.

நெஞ்சங்கள் பதைக்கவும்
உணர்வுகள் கொதிக்கவும்
வலிகளையே அள்ளித்தின்ற
அக்கொடிய பொழுதுகளை…
குமுறிக் குமுறியே
கையறு நிலையில்த் தேம்பிய
எரிமணல் மேட்டினை….
ஈகமெழுதிய உப்புத் திடலை
எப்படி மறக்கும் எங்கள் மனம் ..!
போர்வெறி கொண்ட பகைவனே
சீரழித்தான் மனுக்குலத்தை…!
போர்நெறி கொண்டதால்
புரட்சிப் படிகளில் மக்கள்
தாமே வலிகளை அள்ளிச் சுமந்தனர்..!
தோற்றுப் போய்விட
குறுநிலமல்ல முள்ளிவாய்க்கால்
நிமிர்ந்து விரிந்த
பன்னாடுகளின் களமது..!
எதிர்காலம் பற்றிய
நம்பிக்கையிழந்த இனமல்ல
எமக்கு முன்னே
நிகழ்காலம் தருமிந்தச்
சலனங்கள் தீரும்!
நிமிர்ந்தெழும் திசைநோக்கி
உறுதியாய் உழைப்போம்..!
உலகிடை திறந்துள்ள
புதிய போர்க் களங்களால்
வல்லாண்மைகள் பெறுகின்ற
அனுபவ ஆச்சரியத்தை
ஒப்பீடு செய்யவும்
ஒப்பாரி வைக்கவும்
இயற்கை காட்டும்
எடுத்துக் காட்டிலே
எம்வலி உணரட்டும்
பன்னாட்டு இராசதந்திரம்.

– இரா.செம்பியன்