மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் மோதல் ; மாவட்ட வைத்திய அதிகாரி கைதாகி பிணையில் விடுதலை !

10 0

மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான மாவட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர், தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு  தெல்தெனிய மாவட்ட நீதிபதி திருமதி தேவிகா சி.ஜெயவர்தன உத்தரவிட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட மாவட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.சி.கே.வீரப்பான  எதிர்வரும் 8ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாவட்ட நீதிபதி அறிவித்துள்ளார்.

மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் மூவரையும் மற்றைய தரப்பினர் மூவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதுடன்,  மாவட்ட நீதிபதி தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மாவட்ட வைத்திய அதிகாரி கைது செய்யப்படவிருந்த நிலையில், அதற்குள் அவர் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி சட்டத்தரணி ஒருவரினால் பொலிஸில் சரணடைந்த நிலையில் கடந்த வியாழனன்று  அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.