மகிந்தராஜபக்ஷவின் அறிக்கைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் விசனம்

310 0

asian-human-rights-commissionகாணாமற்போன செயலகம் அமைப்பது தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையானது சட்ட ஆட்சியின்மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதல் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்படப்போகும் காணாமல்போனோர் அலுவலகம், சிறீலங்காப் படையினரைப் பழிவாங்கும், அவர்களைக் காட்டிக்கொடுக்கும் செயல் என்றும் இந்தச் சட்டமூலத்தைத் தோற்கடிக்கவேண்டுமெனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

அனைத்துலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிக மோசமான குற்றச் செயலான பலவந்தமாக காணாமற்போகச்செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தக்கூடாது என்று மகிந்த ராஜபக்சவின் அறிக்கையில் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது.

சிறீலங்காப் படையினர் சிலர் இதில் நேரடியாகத் தலையிட்டிருக்கலாம் என்ற காரணத்துக்காகவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் விசாரிக்கப்படவேண்டுமென்பதே நாகரீக சமுதாயத்தின் அடிப்படை விதியாகும்.

குற்றச்செயல்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அது நடைபெறவில்லை.

ஊடகவியலாளர்கள் படுகொலைகள், கடத்தல்கள், தாக்கப்படுதல் போன்ற சம்பவங்களுக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆயுதப் படைகளின் மீட்பர் என மக்களின் மத்தியில் தன்னை இனங்காட்ட மகிந்த ராஜபக்ஷ முனைகிறார் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.