அரசியல் செய்வதை பேராயரும் கத்தோலிக்க சபையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்

34 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்  சம்பவத்தை அரசியலாக்குவதை பேராயரும், கத்தோலிக்க சபையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேராயருக்கு சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடம் மாத்திரமா டீல் உள்ளது.

சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு அஸ்கிரிய பீடம் குறிப்பிடவில்லை. கத்தோலிக்கர்களின் கௌரவத்தை இல்லாதொழிப்பதை கத்தோலிக்க சபை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26)  இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில்  பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக மாத்திரம் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பேராயரும், கத்தோலிக்க  சபையும் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. கத்தோலிக்கர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இருப்பினும் இந்த தாக்குதல் நாட்டில் இடம்பெற்ற முதலாவது  தாக்குதல் அல்ல, தலதா மாளிகை, ஸ்ரீ மா விகாரை,காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மத  தலங்கள் மீது அடிப்படைவாதிகளாலும்,பயங்கரவாதிகளாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தலதா மாளிகை தாக்குதல், அரந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவங்களை சிங்கள பௌத்தர்கள் இழுத்துக் கொண்டு செல்லவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்தாரிகளையும், தாக்குதலை தடுக்க தவறியவர்களையும் கத்தோலிக்க சபை குற்றஞ்சாட்டுவதில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை மாத்திரமே விமர்சிக்கிறார்கள். குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கத்தோலிக்க மக்களுக்கு இந்த நாட்டில் உள்ள கௌரவத்தை இல்லாதொழிக்க வேண்டாம் என பேராயரிடமும், கத்தோலிக்க சபையிடமும் கைக்கூப்பி வேண்டிக் கொள்கிறேன். சஜித்துக்கும், அநுரவுக்கும் வாக்களிக்குமாறு பேராயர் குறிப்பிடுகிறார். தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இவரால் எவ்வாறு குறிப்பிட முடியும்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ஷவுக்கு  சிங்கள பௌத்தர்கள் வாக்களித்தார்கள். ஆனால் அஸ்கிரிய பீடம் கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு சிங்கள மக்களிடம் குறிப்பிடவில்லை. மத தலைவர்கள் அரசியல் மேடைகளுக்கு வருவதில்லை. சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடம் மாத்திரமா பேராயர் டீல் வைத்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்குமாறு பேராயர் குறிப்பிடுகிறார்.ஆனால் குண்டுத்தாக்குதல்தாரிகளின் தந்தை மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர். இந்த கட்சிக்கு வாக்களிக்குமாறு  குறிப்பிடும் அளவுக்கு பேராயர்   ஏன் தள்ளப்பட்டுள்ளார் என்பதை அறியவில்லை. ஆகவே இவரது கருத்துக்கள் துரதிஷ்டவசமானது.

தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் ஒருபோதும் சிங்களவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு குறிப்பிடவில்லை. ஆகவே உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அரசியலுக்காக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டாம் என்பதை கத்தோலிக்க சபையிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.